கடந்த டிசம்பர் 2022 அன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் காலநிலை பேரணி பல்வேறு சுற்றுச்சூழல் செயல்பாட்டு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என கணிசமானோர் பங்கேற்றனர். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மற்றும் காற்று மாசு, பெரு நிறுவனங்களின் பொறுப்பற்றத்தன்மை, காலநிலை நீதியை நிலை நாட்ட போராடுவது போன்ற வாசகங்கள் பொரித்த பதாகைகளும், முழக்கங்களும் அப்பேரணியில் இடம் பெற்றது. அப்பேரணியின் பங்கேற்பாளர்களில் ஒருவனாக நானும் கலந்து கொண்டேன். இந்நிகழ்வுகளை வேடிக்கைப் பார்த்த ஒரு பொறியியல் பட்டம் பெற்று, தரவு அறிவியல் சார்ந்த பணியில் இருக்கும் நபர், காலநிலை நீதி என்பது ஒரு முட்டாள்தனமான முழக்கம் என்ற கடும் விமர்சனத்தை முன் வைத்தார். அதற்கு அவரின் நியாயப்படுத்துதல் யாதெனில் மனித மையக் கோட்பாடான 'நீதி' இயற்பியலுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதாகும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு ஒரு தரப்பினருக்கு அதிக பாதிப்பையும், மற்றொரு தரப்பினருக்கு குறைந்த பாதிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் தெரியாது. அந்த வகையில் காலநிலை நீதி என்ற ஒன்று கிடையாது என தெரிவித்தார். அவரின் கருத்து எனக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, Technology, Engineering and Mathematics-STEM) பயின்ற கணிசமானோருக்கு உலகப் பிரச்சனைகள் அனைத்திற்குமான தீர்வுகளை அவர்களால் மட்டுமே கொடுக்க இயலும் என்ற எண்ணம் பரவலாக இருப்பது நிதர்சனம். அதனால் காலநிலை நீதி பற்றி அவருக்கு விளக்க முற்பட்டேன், ஆனால் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் தான், STEM எவ்வளவு முக்கியமோ, அதுபோல சமூக அறிவியல்கள், மனித பண்பியல்கள் மற்றும் கலை (Social Sciences, Humanities and the Arts for People and the Economy/Environment-SHAPE) ஆகியவையும் உலகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை உருவாக்க முக்கியமானது. இந்த அடிப்படையில், ஒரு சமூக அறிவியல் ஆராய்ச்சியாளனாக, காலநிலை நீதியை பற்றிய ஒரு புரிதலை பரவலாக்கும் வகையில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் என்பது தட்ப வெப்பத்திலும், வானிலையிலும் நீண்டகால விளைவுகள் ஏற்படுவதை குறிப்பதாகும். இந்த மாற்றங்கள் மனித செயல்பாடுகளாலேயே ஏற்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் மூலம் வெளியிடப்படும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமாதலை அதிகரிப்பதே ஆகும். மாறுகின்ற புவியின் சராசரி வெப்பநிலை பல்வேறு அதீத வானிலை நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. தற்போது காலநிலை மாற்றம் அதி முக்கியமான பிரச்சனையாக அறிஞர்களால் கருதப்படுகிறது. ஏனென்றால் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ளூர் தொடங்கி உலக அளவில் சீரற்ற வகையில் உணரப்படுகிறது.
சமூக நீதியின் வாயிலாக காலநிலை நீதியை புரிந்து கொள்ளுதல்
காலநிலை நீதி குறித்த விவாதங்கள் கல்விப் புலத்திலும், சுற்றுச்சூழல் கொள்கைத் தளத்திலும் மற்றும் காலநிலை செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் தற்போது தான் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மனித உரிமைகள் தொடர்பான பல தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட சமூக நீதியின் உதவி கொண்டு காலநிலை நீதியை புரிந்து கொள்வதே சரியானதாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன்.
சமூக நீதி என்பது அனைத்து மக்களுக்கும் சமமான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உரிமைகளை அரசுக் கொள்கைகளின்படி உறுதிப்படுத்துவது. அந்த வகையில், காலநிலை நீதி என்பது பரவலாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளான அதீத மழை, வெள்ளம், வறட்சி போன்ற அதீத வானிலை நிகழ்வுகள், சமமற்ற முறையில், மக்களை [குறிப்பாக பூகோள தெற்கு (Global South) நாடுகளைச் சேர்ந்தவர்கள்] பாதிப்பிற்கு உள்ளாக்கும் போது, அப்பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிய முற்படுவதே ஆகும். குறிப்பாக, அதிக பாதிப்பிற்கு உட்பட வாய்ப்பிருக்கும் வளர்ந்துவரும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பால் புதுமையர் (LGBTQ+) நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் காலநிலை நீதி உறுதிபடுத்த முனைகிறது.
மேலும் காலநிலை மாற்றம் சார்ந்த மட்டுப்படுத்துதல் (Mitigation) மற்றும் தகவமைத்து கொள்ளல் (Adaptation) ஆகிய நடவடிக்கைகளில் காலநிலை நீதியே அடிப்படை. இவை இரண்டிற்குமான பொருளாதார செலவுகளை வரலாற்று ரீதியாக அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்ட வளர்ந்த நாடுகள் ஏற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த காலநிலை நீதி விழைகிறது. வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு இழப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 290 முதல் 580 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பெரும் செலவுகளை பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் ஏற்க வேண்டியது பெரும் அவலம். அந்த வகையில் காலநிலை நீதியை உறுதிபடுத்துவது அத்யாவசியமாகிறது. அதோடு, சமூக ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் அல்லது புதிய பிரச்சினைகளை உருவாக்கும் தன்னிச்சையான காலநிலை தீர்வுகளை கண்டறிந்து தவிர்க்கவும் காலநிலை நீதி சார் கண்ணோட்டம் உதவுகிறது.
அநீதி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான கேள்விகள்
காலநிலை நீதி காலனித்துவ அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ கட்டமைப்புகளால் ஏற்படுத்தப்படும் அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கேள்விக்கு உட்படுத்துகிறது. உதாரணதிற்கு, நவீன ஐரோப்பிய பேரரசுகள் உலகம் முழுமைக்கும் விரிவடைந்து வன்முறை மற்றும் ஆயுதப் பயன்பாட்டை கொண்டு பூர்வ குடிமக்கள் வசிக்கும் நிலங்களை அபகரித்துக் குடியேறி, அவர்களின் கலாச்சாரங்களை அழித்து, புதைபடிவ எரிபொருள்கள், கனிமங்கள், நீர், காட்டுயிர் போன்ற இயற்கை வளங்களை சுரண்டி அவர்களின் லாபத்திற்காக பயன்படுத்தினர். முன்னொரு காலத்தில் ஐரோப்பியர்களின் காலணிகளாக இருந்த பூகோள தெற்கு நாடுகளின் வளங்களை சுரண்டி பூகோள வடக்கு (Global North) நாடுகளின் தேவைகளை நிறைவேற்றுவது இன்றளவும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. கரியமில வாயு வெளியீட்டில் 50% உலகின் பெரும் பணம் படைத்த 10% நபர்களால் மட்டும் வெளியேற்றப்படுகிறது. அந்நபர்கள் பெரும்பாலும் பூகோள வடக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே!
மேலும் நம்முடைய பொருளாதார அணுகுமுறையும் காலநிலை அநீதிக்கு இட்டுச்செல்கிறது. சுரண்டல் மனநிலை மற்றும் அதிக லாபத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றைத் தன்மை கொண்ட பொருளாதார கொள்கையை (Linear Economy) கைவிட்டு சுழற்சி பொருளாதாரம் (Circular Economy) போன்றவற்றிற்கு மாறுவதற்கான தேவை நிலவுகிறது.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் பின்வரும் வலுவான கேள்விகளைத்தான் காலநிலை நீதி முன் வைக்கிறது:
- காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை யார் அதிகம் எதிர்கொள்கிறார்கள்?
- காலநிலை செயற்பாடுகளால் யாருக்கு லாபம்?
- காலநிலை மாற்றம் தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறைகளில் யாருடைய குரல்கள் கேட்கப்படுகின்றன?
- குறைந்த கார்பன் பயன்பாடு சார் பொருளாதாரத்திற்கு மாற்றை எவ்வாறு உறுதி செய்வது?
- காலநிலை நிதி (Climate Finance) யாருக்கு அதிகம் பங்கிடப்படுகிறது?
இத்தகு கேள்விகளின் மூலம் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் சமநிலை மற்றும் நீட்டிக்க கூடிய எதிர்காலத்தை அனைவருக்கும் வழங்கும் ஆற்றல் கொண்டது.
காலநிலை நீதியின் முக்கியத்துவம்
காலநிலை நீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் அதே வேளையில், காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு கட்டாய கட்டமைப்பாகும். காலநிலை மாற்றம் சார்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அப்பாற்பட்டது என்பதை காலநிலை நீதி அங்கீகரிக்கிறது. சமூக நீதிக் கொள்கைகளை உட்பொதிப்பதன் மூலம், காலநிலை நீதியானது நமது சமூகங்களை சமமான, மீள்தன்மை (Climate Resilience) கொண்ட மற்றும் நிலையான சமூகமாக (Sustainable Society) மாற்ற முயல்கிறது. அந்த வகையில் அனைவரின் நலனையும் பாதுகாக்கிறது. காலநிலை நீதியை அடைவதற்கு வரலாற்று அநீதிகளை ஒப்புக் கொண்டு, ஓரங்கட்டப்பட்ட/ஒடுக்கப்பட்ட குரல்ககளுக்கு செவிசாய்த்து, அறத்தின் வழி நின்று காலநிலை செயல்பாட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவது அவசியம். காலநிலை நீதியை உறுதிபடுத்துவதன் மூலம் மட்டுமே, அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கையும், வருங்கால தலைமுறைகளுக்காக நமது பூமியைப் பாதுகாக்கும் எதிர்காலத்தை நோக்கிய பாதையை நாம் உருவாக்க முடியும். எனவே காலநிலை நீதியை நிலைநாட்ட செயல்படுவோம்…